ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான் (2நாளா 16:12).

 

ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.

 

பிரியமானவர்களே, சாலொமோனின் புதல்வன் ரெகொபெயாம் ஆட்சி காலத்தில் இஸ்ரவேல் தேசமானது, வடக்கு ராஜ்ஜியம் (10 கோத்திரம்)  , தெற்கு ராஜ்ஜியம் ( 2 கோத்திரம்) என  இரண்டாகப் பிளக்கப்பட்ட்து. 10  கோத்திரங்களைக் கொண்ட வடக்கு ராஜ்ஜியம் இஸ்ரவேல் தேசம் (சமாரியா தலைநகரம்) என்றும், 2 கோத்திரங்களைக் கொண்ட தெற்கு ராஜ்ஜியம் யூதா தேசம் (எருசலேம் தலைநகரம்) என்றும் அழைக்கப்பட்டது. தெற்கு ராஜ்யமான யூதாவை ஆட்சி செய்த 3 வது ராஜா தான் ஆசா. இவன் தன்னுடைய ராஜ்ய பாரத்தின் ஆரம்ப நாட்களில் கர்த்தரையே சார்ந்து, அவருக்கு பிரியமானவற்றை மாத்திரமே செய்தான். ஆனால் அவனது ராஜ்ஜிய பாரத்தின் 36வது வருஷத்தில் இஸ்ரவேலின் ராஜா பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்த போது, இம்முறை ஆசா கர்த்தர் கடந்த நாட்களில் அவனுக்குச் செய்த உதவிகளை எல்லாம் மறந்து, கர்த்தரை சார்ந்திருக்காமல் சீரியா ராஜாவை சார்ந்து இருந்தான். இது கர்த்தருடைய பார்வைக்கு விரோதமாக இருந்தது. ஆகவே அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று, இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்று ஆசாவை எச்சரிக்கிறான் (2 நாளா 16 :7 -9). ஆசாவோ கர்த்தருடைய எச்சரிப்பின் சத்தத்துக்கு செவி கொடுத்து அவனுடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்புவதுக்குப் பதிலாக, அவன் ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்ததோடு; ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான் (16:10).

 

பிரியமானவர்களே, கர்த்தர் நம்முடைய பாவங்களை சுட்டிக் காட்டும் போது மனந்திரும்ப வேண்டும். அது மாத்திரமல்ல அவனது ராஜ்ய பாரத்தின் 39 வது வருஷத்தில் அவனது கால்களில் வியாதி வந்து, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை தேடாமல் , பரிகாரிகளையே தேடினான் (16 :12) என்று வேதம் சொல்லுகிறது. நான் நினைக்கிறன் அவனுக்கு கால்களில் வந்த வியாதி கர்த்தரால் அனுமதிக்கப்படட வியாதி என்று. ஆனால் அவன் வியாதில் மனந்திரும்பி கர்த்தரை தேடி இருந்திருந்தால் கர்த்தர் அவனது வியாதியை குணப்படுத்தி அவனது ஆயுசு நாட்களைக் கூட்டி கொடுத்திருப்பார், அவனோ கர்த்தரை தேடாமல் வைத்தியர்களை தேடினான் என்று வேதம் சொல்லுகிறது அவனுக்கு கர்த்தர் மனந்திரும்பும் படி இரண்டு வருஷம் கால அவகாசம் கொடுத்திருந்தும் அவன் கர்த்தரை தேடாததினால் அவனது ராஜ்ஜிய பாரத்தின் 41வது வருஷத்தில் மரித்துப் போனான் (16:13).

 

பிரியமானவர்களே, கர்த்தரே நமது பரம வைத்தியர், வைத்தியர்கள் நமக்கு வியாதியில் சிகிச்சை அளித்தாலும் நமக்கு சுகம் கொடுப்பவர் கர்த்தரே, வைத்தியர்களை சிருஷ்டித்ததும் கர்த்தரே, வைத்தியர்களும் மனுஷர்கள் தான். ஆசா ஆரம்பத்தில் கர்த்தரையே சார்ந்து வாழ்ந்தான், ஆனால் தனது வாழ்க்கையின் கடைசி காலங்களில் கர்த்தரை மறந்து, மனுஷர்களை நம்பி வாழ்ந்தான்.

 

பிரியமானவர்களே, எப்படி நீங்கள் உங்களுடைய கிறிஸ்தவ ஜீவியத்தை ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, உங்களுடைய கிறிஸ்த ஜீவியத்தை எப்படி முடிக்கீறீர்கள் என்பது தான் முக்கியம். நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரையே நம்புவோம், அவரே பரம வைத்தியர். நாமும் பவுலைப் போல் கிறிஸ்த ஜீவியத்தை வெற்றிகரமாக கர்த்தருக்குள் முடிப்போம்.  ‘நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2தீமோ 4:7) அல்லேலூயா !

 

தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

ஜெபம்

கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன், இந்த நாளில் நீர் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தகப்பனே ஆசாவின் வாழ்க்கையின் ஊடாக நீர் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தகப்பனே நாங்களும் ஆசா செய்த தவற்றை எங்களுடைய வாழ்க்கையில் செய்யாது, எப்போதும் உம்மையே சார்ந்து, உம்மையே நம்பி எங்களுடைய விசுவாச ஓட்டத்தை உமக்குள்ளே வெற்றிகரமாக முடிக்க நீர் எங்களுக்கு கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறேன். நீர் எங்களுடைய விண்ணப்பத்தை கேட்டதட்காக நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.

 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.