

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் (ஏசா 49:16).
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்
பிரியமானவர்களே, கர்த்தருடைய யூதா ஜனங்கள் தாங்கள் இருந்த சூழ்நிலையின் நிமித்தம் கர்த்தர் அவர்களைக் கை விட்டுவிட்டார் (49:14) என்று புலம்பிக் கொண்டிருந்த போது, கர்த்தர் அவர்களைப் பார்த்து சொல்லுகிறார் ‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை’ (49:15). இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது (49:16) என்று. அல்லேலூயா !
பிரியமானவர்களே, பால் குடிக்கும் பாலகனை தாய் மறந்து போவாளோ? இல்லை, தாய் தன் பாலகனை குறித்து எப்போதும் சிந்தித்தவளாக, அவன்/ அவள் மீது அன்புள்ளவளாகவே இருக்கின்றாள். ஆனாலும், சில நாடுகளில் தாய் தான் பெற்ற பிள்ளையைக் கைவிட்டாள் என்ற செய்திகளையும் கேட்கின்றோம், ஆனால் அது அபூர்வமான செய்தியாக இருக்கின்றது. அப்படி ஒரு தாய் தன் பாலகனை மறந்து போனாலும், நான் உன்னை ஒரு போதும் மறந்து போவதில்லை என்று கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு கூறுகிறார்.
பிரியமானவர்களே, சில சமயங்களில் நாமும், சூழ்நிலை நமக்கு விரோதமாக இருக்கும் போது, யூதா ஜனங்களைப் போல் கர்த்தர் நம்மை கைவிட்டு விட்டார் என்று புலம்புவதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல, கை விடப்பட்ட நிலைமையில் நீங்கள் இருப்பது போல் தோன்றினாலும், கர்த்தரால் நீங்கள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை, அவர் உங்களை தன் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார், ஆங்கீல வேதாகமத்திலே இந்த வசனத்தை ‘ கர்த்தர் தன் உள்ளங்கைகளில் நம்மை ‘பொறித்து வைத்திருக்கிறார்’ என்னும் அர்த்தம் கொள்ளும் விதமாக (insribed/ engraved/ graven) அழகாய் மொழி பெயர்த்திருக்கிறார்கள். ‘வரைந்து வைத்திருப்பதை’ ஒருவரால் இலகுவில் அழித்துவிடலாம் ஆனால் ‘பொறித்து வைத்திருப்பதை’ யாராலும் அழிக்க முடியாது. எவ்வாறு ஒரு நபர் தனக்கு ‘பிரியமான நபரின் பெயரை’ தன் கைகளில் பொறித்து வைத்திருக்கிறாரோ (Tattoo) அது போல், கர்த்தர் நம்மை அளவுக்கதிகமாக நேசிப்பதால் நம்மை அவருடைய உள்ளங்கையில் ‘பொறித்து வைத்திருக்கிறார்’ . அல்லேலூயா ! அவ்வளவு அன்பான தேவன் நம்முடைய தேவன். அவரே மனுக்குலத்தின் பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக கல்வாரி சிலுவையில் கிருபாதார பலியாகி, மூன்றாம் நாள் உயிரோடெழும்பி, இன்றும் பரலோகத்தில் ஜீவிக்கின்ற தேவனாகிய இயேசு கிறிஸ்து, அவர் உங்களை நேசிக்கிறார். அவரை விசுவாசியுங்கள், ஒரு போதும் அவர் உங்களை கைவிடமாட்டார். அவர் தன்னுடைய உள்ளங்கையில் உங்களை பொறித்து வைத்து எப்போதும் உங்கள் நினைவாகவே இருக்கிறார். அவருடைய பாதுகாப்பிலிருந்து ஒருவரும் உங்களை பிரித்து விட முடியாது. உங்களுக்குரிய பாதுகாப்பு அவருக்குள் இருக்கின்றது. அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்
கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். தகப்பனே இந்நாளில் நீர் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக நன்றி செலுத்துகிறேன். நீர் எங்களை சிருஷ்டித்ததுமாத்திரமல்ல நீர் உமது உள்ளங்கையில் எங்கள் ஒவ்வொருவரையும் வரைத்து வரைந்து வைத்துஇருக்கிறதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். அது மாத்திரமல்ல மனுக்குலத்தின் பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக கல்வாரி சிலுவையில் கிருபாதார பலியாகி, மூன்றாம் நாள் உயிரோடெழும்பி, இன்றும் ஜீவிக்கிறதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தகப்பனே இந்நாள் முழுவதும் உமது பாதுகாப்பினால் நீர் எங்களை பாதுகாக்கும் படி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
Add comment
Comments