

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2 பேதுரு 3 : 9 ).
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களைதெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, கர்த்தரை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு அவருடைய நியமங்களைக் கைக் கொண்டு, அவருடைய சித்தத்தை செய்து கொண்டிருக்கின்ற உங்களுக்கு ஒருவேளை அவருடைய வருகை தாமதிப்பது போல் தோன்றினாலும், உலகத்தில் வாழுகின்ற எல்லா ஜனங்களும் கெட்டுப்போகாமல் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பியே அவர் எல்லார் மேலும் நீடிய பொறுமையுள்ளவராக இந்நாட்களில் இருக்கிறார் என்று வேத வசனம் நமக்கு கற்றுத் தருகின்றது.
பிரியமானவர்களே, இந்த கடைசி நாட்களில் வருகையை நம்பாத கிறிஸ்தவர்களும் திரளாய் காணப்படுகிறார்கள். நம்முடைய ஆண்டவர் பாவத்தை வெறுக்கிறார் ஆனால் அவர் பாவிகளை நேசிக்கிறார். அதனால் தான் அவர் எல்லார் மேலும் நீடிய பொறுமையுள்ளவராக இந்நாட்களில் இருக்கிறார். கிருஷ்ணன் கொடியவனாகிய நரகாசுரனை அழிப்பதட்க்காக பரலோகத்தில் இருந்து மனித அவதாரம் எடுத்து இந்த பூலோகத்துக்கு வந்து அவனை அழித்தார் என்று நான் சிறு பையனாக இருந்த போது இந்து சமய புஸ்தகத்தில் படித்தேன், இந்து சமய புராதன நூல்களும் அவற்றையே கூறுகின்றன. ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பரலோகத்தில் அவருக்கு இருந்த அத்தனை மகிமைகளையும் விட்டு விட்டு இந்த பூலோகத்துக்கு வந்தது யாரையும் அழிப்பதுக்காக அல்ல, மாறாக அவர் மனித குலத்தை அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவவே வந்தார். (மன்னிக்கவும் யாரையும் புண்படுத்தும் விதமாக நான் இதை சொல்லவில்லை, சத்தியத்தை சொல்ல விரும்புகின்றேன்)
பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீண்டும் இந்த பூலோகத்துக்கு வரப்போகிறார், அவருடைய வருகையின் நாள் வரைக்கும் உள்ள இந்த காலம் “கிருபையின் காலம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த கிருபையின் காலத்தில் ஆண்டவர் நம் ஒவ்வொருவர் மேலும் கிருபை நிறைந்தவராகவும், நீடிய பொறுமையுள்ளவராகவும் இருக்கிறார். கர்த்தருடைய வருகையின் நாளோ “நியாயத் தீர்ப்பின் காலம்”. இக்காலத்தில் கர்த்தர் நீதியும், நியாயமுள்ளவராகவும், மனுஷரை நீதியாய் நியாயம் விசாரிக்கிறவராகவும் இருக்கிறார்.
பிரியமானவர்களே, இதை வாசித்துக் கொண்டிருக்கிற, நீங்கள் ஒருவேளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக் கொள்ளாது இருப்பீர்களானால், இந்த கிருபையின் காலத்தை நீங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய ஆபத்தான இந்த நாட்களில் காலத்தை நழுவ விடாமல் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக் கொண்டு உங்களுடைய பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்புங்கள்.
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:8 - 9)
அல்லேலூயா !
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
ஜெபம்
கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இந்நாளில் நீர் எங்களோடு பேசின வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் வாக்குத் தத்ததில் உண்மையுள்ளவராக இருக்கிறதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கிறதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் யாரெல்லாம் இந்நாளில் உமது வார்த்தைக்கு செவி கொடுத்து உம்மை ஆண்டவராக ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாய் ஆசிர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறேன், மற்றும் உமது வருகை மட்டும் உமக்குள்ளே விசுவாசத்தில் நிலைத்திருக்க எம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும்படியாக ஜெபிக்கிறேன். நீர் எங்களுடைய ஜெபத்துக்கு பதில் கொடுக்கப் போவதட்க்காக நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
Add comment
Comments