

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசங்கள் சங்கீதம் 34:9 மற்றும் சங்கீதம் 34:10
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (சங் 34:9)
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது (சங் 34:10)
பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது “கர்த்தருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை, சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது" என்று. இங்கே “கர்த்தருக்குப் பயந்திருங்கள்” என்பதுக்கு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்திருங்கள் என்று அர்த்தம்.
பிரியமானவர்களே, மனிதர்களுடைய வாழ்க்கையில் குறைவுகள் வருவது இயல்பு .ஆனால் தேவனுடைய வசனம் சொல்லுகிற பிரகாரம் நீங்களும், நானும், எங்களுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து இருக்கும் போது உஙக்ளுடைய வாழ்க்கையில் என்னுடைய வாழ்க்கையில் குறைவுகள் வராது. இதை சங்கீதக்காரன் மூலமாய் தேவன் இன்னும் எங்களுக்கு அழகாய் சொல்லுகிறார், சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது என்று. பிரியமானவர்களே காட்டு ராஜாவாகிய சிங்கம் தன்னுடைய குட்டிகளுக்கு எப்படியாவது இரையை கொண்டு வந்து கொடுத்து விடுமாம், ஒரு போதும் தன்னுடைய குட்டிகளை பட்டினி போடாதாம். அதனால் தான் தேவன் நமக்கு சங்கீதக்காரன் மூலம் சொல்லுகிறார் ஒருவேளை சிங்க குட்டிகள் கூட தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருந்தாலும், கர்த்தரை தேடுபவர்களாகிய உங்களுக்கும், எனக்கும் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு நன்மையையும் குறைவு படாது என்று.
ஆம் பிரியமானவர்களே, நாம் நம்முடைய வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளிலும் கர்த்தருக்கு முன்னுரிமை கொடுத்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவரை நம்முடைய வாழ்க்கையில் கனப்படுத்தி அவரை நம்முடைய வாழ்க்கையில் தேடும் போது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் எந்த நன்மையும் குறைவு படாத வண்ணம் நடத்தி செல்ல தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இந்த காலை வேளையில் நீர் எங்களோடு பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக நன்றி செலுத்துகிறேன். சங்கீதம் 34 :9- 10 இந்த படி நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளிலும் உமக்கு முன்னிருமை கொடுத்து, உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து எங்களுடைய வாழ்க்கையில் உம்மை கனப்படுத்தி உம்மை எங்களுடைய வாழ்க்கையில் ஆராதிக்க நீர் எங்களுக்கு கிருபை செய்யும் படி ஜெபிக்கிறேன், இந்த நாளிலும் யார் யாரெல்லாம் உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்திருக்க தீர்மானம் எடுத்திருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிக்கும் படி ஜெபிக்கிறேன். எங்களுடைய விண்ணப்பத்தை கேட்டதட்க்காக நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
info@godismysalvationministries.com
Add comment
Comments
Ames!! God bless your ministry.