

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன் (சங் 52 : 8)
பிரியமானவர்களே, 52 வது சங்கீதத்தை தாவீது பாடியிருக்கிறார், இந்த வேத வசனத்தை (சங் 52 : 8) இரண்டு பகுதிகளாக பிரிக்க விருப்புகின்றேன்.
1) நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்
2) தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்
பிரியமானவர்களே, ஒலிவ மரத்தின் வேர்கள் மண்ணுக்கடியில் பரந்து அகன்று சென்று உறுதியாக நிலைத்திருக்கும் தன்மை வாய்ந்தது, அது மாத்திரமல்ல பச்சையான ஒலிவமரம் எண்ணெய் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. அந்த எண்ணெய் அபிஷேக தைலத்திற்கும் ஆலயப் பணிகளுக்கும் அந்நாட்களில் பயன்படுத்தப்பட்டது. அதனால் தான் தாவீது கூறுகிறார் தான் தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன் என்று. ஒலிவ மரம் எவ்வாறு நிலத்துக்கடியில் வேரூன்றி நிலைத்திருக்குமோ அந்த அளவுக்கு தேவனில் அவர் உறுதியாக வேரூன்றி நிலைத்திருந்தார். அதுமாத்திரமல்ல ஒலிவ மரத்தின் எண்ணையைப் போல் அவர் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தார்.
யோவான் 15:5 சொல்லுகிறது, "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று. அல்லேலூயா !
பிரியமானவர்களே, நாங்களும் தாவீதை போல் தேவனில், அவருடைய சரீரமாகிய அவருடைய ஆலயத்தில் ஒலிவ மரத்தைப் போல் நிலைத்திருப்போமானால் நம்முடைய வாழ்க்கையும் தாவீதை போல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக,கனி கொடுக்கிற வாழ்க்கையாக பிரயோஜனமுள்ளதாக இருக்கும். அல்லேலூயா !
பிரியமானவர்களே, இரண்டாவது தாவீது அவருடைய ஞானத்திலோ, அவருடைய பெலத்திலோ, அவருடைய படையின் பெலத்திலோ நம்பியிருக்கவில்லை மாறாக அவர் எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய கிருபையையே நம்பியிருந்தார். அவர் நன்கு அறிந்திருந்தார், தேவனுடைய கிருபை அவரோடு இருக்கும் பட்ச்சத்தில் அவரால் வாழ்க்கையில் எப்படிப்பட்டதான நெருக்கமான சூழ்நிலையையும் எதிர்கொண்டு ஜெயத்தைப் பெற முடியும் என்று. அல்லேலூயா !
பிரியமானவர்களே. தாவீதுக்கு தேவனோடு இருந்த நெருக்கமான உறவும், தேவனுடைய கிருபையுமே அவருடைய வாழ்க்கை ஜெயமாக மாற காரணமாக இருந்தது. நாங்களும் தாவீதைப் போல் தேவனில் நிலைத்திருந்து, அவருடைய கிருபையை நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் நம்புவோம். அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். நீர் இந்த நாளில் எங்களோடு பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன் தாவீதைப் போல் நாங்களும் உம்மில் வேரூன்றி நிலைத்திருக்கவும், உம்முடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கவும் எங்களுக்கு உதவி செய்யும் படி ஜெபிக்கிறேன். நீர் எங்களுடைய ஜெபத்தைக் கேட்டதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
info@godismysalvationministries.com
WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
Add comment
Comments